மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தெற்கு ரத வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த விழாவில் மணமகன் வீட்டார் மற்றும் பெண் வீட்டார் இருவரும் மண்டபத்தில் வாசலில் ஒருவரை ஒருவர் போதையில் அடித்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாகச் சீர்காழி போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்று இரு தரப்பையும் சமாதானம் செய்து விசாரணை செய்ததில், நிச்சயதார்த்த விழாவிற்கு வந்தவர்களுக்கு நடந்த விருந்தில் பாயாசம் பரிமாறியுள்ளனர்.
அப்பொழுது போதையில் இருந்த பெண் வீட்டை சேர்ந்த ஒருவர், என்னப்பா பாயாசம், இனிப்பே இல்ல என்றாராம். தொடர்ந்து அவர் போதையில் மாப்பிள்ளை வீட்டாரை திட்டிக்கொண்டே இருந்தார். அதைத்தொடர்ந்து மேலும் பலர் மாப்பிள்ளை வீட்டாரை திட்டினர்.
இந்த நிலையில் நிச்சயதார்த்த விழா முடிந்து திரும்பும்போதும், போதை ஆசாமி திட்ட ஆரம்பித்தார். அப்போது மாப்பிள்ளை வீட்டுக்காரர் ஒருவர், (அவரும் சரியான போதை) மண்டபத்தில் இருந்து ஒரு சாம்பார் பாத்திரத்தை எடுத்து வந்து, போதையில் திட்டிக்கொண்டிருந்த பெண்வீட்டுக்காரர் மேல் கொட்டினார். இதனால் சண்டை பெரிதானது.
ஒரவரை ஒருவர் கைகளால் அடித்துக்கொண்டனர். பெரும்பாலானவர்கள் போதையில் இருந்ததால் சண்டைை யை நிறுத்தவோ, சமாதானம் செய்யவோ அங்கு ஆள் இல்லை. இதனால் கைகலப்பு அதிகமானது. மண்டபத்தில் இருந்த நாற்காலிகளை எடுத்து ஒருவர் மீது ஒருவர் வீசினர். இந்த நிலையிலும் சிலர் அதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரவ விட்டனர்.
தகவல் அறிந்து வந்த சீர்காழி போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி விட்டனர்.