தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் சுற்றுச்சூழல் சார்பில் தனது பங்களிப்பை திறம்பட செயல்படுத்தியதற்காக பசுமை முதன்மையாளர் விருது, காசோலை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தனது பங்களிப்பை திறம்பட செயல்படுத்திய அரியலூர் மான்ட்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு பசுமை முதன்மையாளர் விருது-2022, ரூ.1 இலட்சத்திற்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழும், அரியலூர் வட்டம், பனங்காநத்தம் கிராமத்தில் உள்ள டால்மியா சிமெண்ட் (பாரத்) லிமிடெட் நிறுவனத்திற்கு பசுமை முதன்மையாளர் விருது-2022, ரூ.1 இலட்சத்திற்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் இன்றைய தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா மாவட்ட ஆட்சியரகத்தில் வழங்கினார்.
தொடர்ந்து, செந்துறை வட்டம், செந்துறையை சேர்ந்த பாபு என்பவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததை தொடர்ந்து அவரது மனைவி பத்மாவதி என்பவருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் விபத்து நிவாரணமாக ரூ.1 இலட்சத்திற்கான காசோலையையும் வழங்கினார். மேலும், கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இளம் விஞ்ஞானிகளுக்கான பயிற்சியில் கலந்துகொண்ட அரியலூர் மான்ட்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மூன்று மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியருக்கு பயிற்சிக்கான சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா வழங்கினார்.
மேலும், உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் “நெகிழியை தவிர்ப்போம் (பிளாஸ்டிக்கை) சுற்றுச்சூழலை
காப்போம், பசுமை எங்கோ! வளமை அங்கே!” போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய மஞ்சப்பைகளை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கி சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பின்னர், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு வனத்துறை, திருச்சி வன மண்டலம், அரியலூர் வனக் கோட்டம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா மற்றும் உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் மரக்கன்றைநட்டர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் டி.இளங்கோவன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் எம்.செந்தில்குமார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) குமார், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் பா.அகல்யா, அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.முத்துக்கிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.