வேலியில்லா தோட்டம் என்றால் மேய்வதற்கு காளை உண்டு, காவல் இல்லா கன்னி என்றால் கண் கலங்கும் வாழ்க்கையும் உண்டு என ஒரு திரைப்பட பாடல் வரிகள் உண்டு. இதனை உறுதிப்படுத்தும் சம்பவம் தினந்தோறும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் திருச்சியில் நடந்த சம்பவம் சற்று வித்தியாசமானது……. கொடூரமானது…….காவல் காக்கவேண்டியவர்களே காளையாக மாறிவிட்டது தான் அந்த கொடுமை.
அந்த கொடுமையைப்பற்றி பார்ப்போம்.
சென்னையை சேர்ந்த 27 வயது இளம் பெண், திருச்சி காந்திமார்க்கெட் பகுதியில் தங்கியிருந்து தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும் மாணவர்களுக்கு தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளும் எடுத்து வருகிறார்.
இவரது முறைப்பையன் ஒருவர் சில மாதங்களுக்கு முன், இந்த பேராசிரியையை பார்க்க திருவண்ணாமலையில் இருந்து வந்து உள்ளார். அப்போது பேராசிரியையின் அறையில் தங்கியிருந்த அந்த நபர், இவருக்கு மயக்க மருந்து கொடுத்து அவரை ஆபாசமாக புகைப்படம், வீடியோ எடுத்து உள்ளார். சில நாட்கள் கழித்து அந்த படங்களை அனுப்பி பணம் கேட்டு மிரட்டுவது உள்பட பல்வேறு பிளாக்மெயில்களில் ஈடுபட்டார்.
அவரது அத்துமீறல் அதிகரித்ததால், பேராசிரியை காந்தி மார்க்கெட் போலீசில் புகார் செய்து உள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் சுகுமார், பேராசிரியையின் போன் நம்பரை வாங்கி வைத்துக்கொண்டு தனியாகத்தானே இருக்கிறார் என கருதி அவருக்கு பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்து உள்ளார். இரவு ஆகி விட்டால் விடிய விடிய ஆபாச படங்களை அள்ளி விட்டிருக்கிறார் இன்ஸ்பெக்டர்.
எலிக்கு பயந்து புலியிடம் போய் சிக்கிய நிலையில் தவித்த பேராசிரியை இது குறித்து இன்ஸ்பெக்டரிடம் தனது எதிர்ப்பை தெரிவித்து உள்ளார். திட்டியும் பார்த்தார். ஆசை வந்தவனுக்கு வெட்கம் விடைபெற்றுவிடும் என்ற நிலையில் இருந்த இன்ஸ்பெக்டர் எதையும் கண்டுகொள்ளாமல் தன் பணி, ஆபாச படங்கள் அனுப்புவதே என்ற கதியில் தினந்தோறும் அனுப்பிக்கொண்டிருந்தார்.
இது குறித்து பேராசிரியை திருச்சி போலீஸ் கமிஷனரிடம் புகார் கூறி உள்ளார். இதுதொடர்பாக கமிஷனர் விசாரணை செய்து கொண்டு வருகிறார். இந்த நிலையில், இன்று அந்த பேராசிரியை திருச்சி கலெக்டர் அலுவலகம் வந்து குறை தீா்க்கும் கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் சுகுமார் குறித்து புகார் மனு கொடுத்தார்.
தன்னை சிலர் மிரட்டுவதாகவும், தன்னிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் சுகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, தன்மீது வேண்டுமென்றே குற்றம் சுமத்துவதாகவும், அப்பெண்தான் தன்னிடம் தவறாக பேசியதாகவும் தெரிவித்தார்.