ஒடிசாவில் பாலசோர் அருகே 3 ரயில்கள் மோதிய பெரும் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 என நேற்று தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஒடிசா மாநில தலைமைச்செயலாளர் பிரதீப் ஜெனா இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த சரியான தகவலை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார்.
நேற்று இரவு முழுதும் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றதில் அனைத்து ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டதாகவும், உடல்களும் வெளியே மீட்கப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இறந்தவர்களின் எண்ணிக்கை சரிபார்க்கப்பட்டு 275 என அதிகாரபூர்வ தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஒடிசா மாநில தலைமைச்செயலாளர் பிரதீப் ஜெனா உறுதிப்படுத்தினார்.
நேற்று சில உடல்கள் இரண்டு முறை எண்ணப்பட்டது கண்டறியப்பட்டது, இதனால் இறப்பு எண்ணிக்கை 275 என திருத்தப்பட்டுள்ளது. இதில் 88 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பிரதீப் ஜெனா மேலும் தெரிவித்தார்.