ஒடிசாவில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் உள்பட 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய இந்த ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய ரயில்வே அதிகாரப்பூர்வமாக இன்று பிற்பகல் அறிவித்துள்ளது. 747 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதில் 56 பேர் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் ரயில்வே தெரிவித்துள்ளது.
மீட்பு பணிகளுக்காக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் மற்றும் அதிகாரிகள் கொண்ட தமிழக குழு ஒடிசா விரைந்துள்ளது. கட்டாக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை இக்குழு இன்று மாலை சந்தித்து நலம் விசாரித்தது. இன்று மாலை 7 மணி நிலவரப்படி ரயில் விபத்தில் ஒரு தமிழர் கூட இறக்கவில்லை என்றும், காயமடைந்தவர்களிலும் தமிழர்கள் இல்லை என்றும் தமிழக குழு தெரிவித்துள்ளது. எனினும் 12 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்படவில்லை என்றும் கூறி உள்ளது. எனினும் தமிழக குழு அங்கேயே தங்கி இருக்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.