ஒடிசாவில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் உள்பட 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய இந்த ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய ரயில்வே அதிகாரப்பூர்வமாக இன்று பிற்பகல் அறிவித்துள்ளது. 747 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதில் 56 பேர் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் ரயில்வே தெரிவித்துள்ளது.
இதனிடையே கோரமண்டல் ரயிலில் பயணித்தவர்களை சென்னைக்கு அழைத்து வர சிறப்பு ரயில் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளது. அதேபோல் புவனேஸ்வரில் இருந்தும் ஒரு ரயில் இயக்கப்படுகிறது. இந்த 2 ரயில்களிலும் 383 பேர் நாளை காலை சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.