Skip to content
Home » ஹெல்மெட் அணிந்து வரும் பெண்களுக்கு வெள்ளிக்காசு…விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்..

ஹெல்மெட் அணிந்து வரும் பெண்களுக்கு வெள்ளிக்காசு…விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்..

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் ஜோதி அறக்கட்டளை மற்றும் மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தஞ்சை பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அண்ணா சிலை அருகே ஹெல்மெட் அணிந்து வந்த பெண்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு வெள்ளி நாணயங்கள் வழங்கப்பட்டன. ஜோதி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தஞ்சை நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் ஹெல்மேட் அணிந்து வந்த பெண்களிடம் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது கட்டாயம் ஹெல்மேட் அணியவேண்டும் என்ற உத்தரவை பின்பற்றி வந்தமைக்காக அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொருவருக்கும் வெள்ளி நாணயங்களை வழங்கி வாழ்த்தினார். இவ்வாறு சுமார் 50 பெண்களுக்கு வெள்ளிக்காசுகள் வழங்கப்பட்டன.

மேலும் இருசக்கர வாகன விபத்துகளில் ஏற்படும் பெரும்பாலான உயிரிழப்புகள் தலைக்கவசம் அணியாமல் செல்வதால் ஏற்படுவது குறித்து வாகன ஓட்டிகளிடமும் பொதுமக்களிடமும் தஞ்சை நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் விளக்கினார் . மேலும் டூவீலர்களில் செல்வோர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் எனவும், ஓட்டுநர் மற்றும் பின்னிருக்கையில் அமர்பவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் எனவும் எடுத்துரைத்தார்.

இது குறித்து ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவிக்கும்போது விபத்து உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் மட்டு மல்லாமல் பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்பவர்களும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தலைகவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து பல்வேறு நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தஞ்சை மாவட்ட காவல்துறையுடன் இணைந்து நடத்தி வருகிறோம். சென்ற மாதம் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தலைகவசம் அணிந்து வந்த பெண்களை ஊக்குவிக்கும் விதத்தில் 1 லிட்டர் பெட்ரோல் விலை இல்லாமல் வழங்கப்பட்டது .

அதன் தொடர்ச்சியாக தற்போது தலைகவசம் அணிந்து வந்த பெண்களுக்கு வெள்ளி நாணயங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து ஹெல்மெட் அணிந்து பயணிப்பவர்களை கவனித்து விரைவில் அவர்களுக்கு தங்க நாணயம் வழங்கி ஊக்கப்படுத்தி அவர்களை பார்த்த பிறகாவது மற்றவர்களும் இருசக்கர வாகனத்தை இயக்கும்போது தலைகவசம் பயன்படுத்த துவங்குவார்கள் என்று நம்புவதாகவும் தொடர்ந்து இது போன்ற நூதன வகையில் சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.  ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் மேலாளர் ஞானசுந்தரி, தன்னார்வலர் கரோலின் ஆகியோர் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *