அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே திருச்சி- சிதம்பரம் சாலையில் தத்தனூர் பொட்டக்கொல்லை பகுதியில் சாலையோரம் நேற்று முன்தினம் இறந்த நிலையில் 20 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் சடலமாக மீட்கப்பட்ட நிலையில். உடையார்பாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதில் இறந்த இளம் பெண் பெரம்பலூர் மாவட்டம் அல்லிநகரம் கிராமத்தைச் சேர்ந்த அபிநயா என்பதும். இவர் அரியலூரில் மளிகை கடையில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
இதனை அடுத்து இறப்புக்கான காரணத்தை விசாரணை செய்ததில் தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் உடன் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
காவல்துறையினர் பார்த்திபனை பிடித்து விசாரணை செய்ததில் பார்த்திபனுக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமண பத்திரிகைகளை வழங்கி வந்துள்ளார். இதை அறிந்த அபிநயா பார்த்திபனிடம் முறையிட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த 30ஆம் தேதி இரவு அபிநயாவுடன் இருசக்கர வாகனத்தில் உடையார்பாளையம் அருகே சென்ற பொழுது சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி கீழே விழுந்ததாகவும், இதில் இருவரும் காயம் ஏற்பட்டு உதவிக்கும் யாரும் இல்லாததால் சாலையோர பள்ளத்தில் அபிநயாவை போட்டுவிட்டு பார்த்திபன் மட்டும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று சென்றுள்ளார்.
இந்நிலையில் உயிருக்கு போராடிய நிலையில் அபிநயா சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்துள்ளார். காதலியை காப்பாற்றாமல் தூக்கி வீசி சென்ற காதலன் பார்த்திபனை உடையார்பாளையம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அபிநயா விபத்தில் தான் உயிரிழந்தாரா! அல்லது பார்த்திபன் கொலை செய்திருக்கலாமா? என்ற கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.