ஆந்திர மாநிலம் அயனவள்ளி, நெடுநூரி சவரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் குவைத்தில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 19-ந்தேதி குவைத்தில் இருந்து விமான மூலம் விஜயவாடா கண்ணவரம் விமான நிலையத்திற்கு வந்து இறங்கினார். விமான நிலையத்தில் இருந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் இளம்பெண்ணுக்கு கொரோனா தொற்று உள்ளதா என ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் இளம்பெண் தனது குடும்பத்தினருடன் காரில் வீட்டிற்கு சென்றார். நேற்று மாலை பரிசோதனை முடிவில் இளம்பெண்ணுக்கு புதிய வகை ஒமைக்ரான் தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இளம்பெண்ணை கோண சீமா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இளம்பெண்ணின் குடும்பத்தாரையும் தனிமைப்படுத்தி அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இளம்பெண்ணின் குடும்பத்தார் யார் யாருடன் தொடர்பில் இருந்தார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில் வெளிநாட்டிலிருந்து வந்த பெண்ணிற்கு புதிய வகை கொரோனா தொற்று பரவி உள்ளதால் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.