சென்னையை தலைமையிடமாக கொண்டு தென்னக ரயில்வே செயல்படுகிறது. இதன் கட்டுப்பாட்டில் உள்ள திருச்சி கோட்ட ரயில்வே சார்பில், திருச்சியில் மண்டல பல்துறை பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த பயிற்சி பள்ளியில் வெளி மாநிலங்களை சேர்ந்த ஆண்கள், பெண்களும் பயிற்சி பெற்று வருகிறார்கள்.
PRO ASM, PRO CC போன்ற பல Category-ல் ஒன்றரை மாதமாக பயிற்சி பெற்று வருகிறார்கள். இதில் சென்ற வாரம் முதல் நாள் 5 பேருக்கு அடுத்த நாள் 4 பேருக்கு அம்மை நோய் பரவத் தொடங்கியது. இதனை கண்ட பயிற்சியாளர்கள் SRMU பொதுச் செயலாளரும் , ஆல் இந்தியா ரயில்வே பெடரேஷன் தலைவருமான கன்னையாவுக்கு தெரியப்படுத்தப்பட்டது.
தொடர்ந்து அதிகாரிகளிடம் எடுத்துக்கூறப்பட்டதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும், முன்னெச்சரிக்கையாக மற்றவருக்கு பரவாமல் தடுக்க தடுப்பூசி போன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் திருச்சி கோட்டத்தில் உள்ள CMS நிர்வாகமும் அதனை சார்ந்த மருத்துவர்களும் கண்டு கொள்ளாமல் விட்ட காரணத்தினால் உடனடியாக திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழனுக்கு எஸ்ஆர்எம்யூ சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உத்தரவின்படி மருத்துவர்கள் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் CMS நிர்வாகம் அம்மை நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்களை அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து எஸ்.ஆர்.எம்.யூ. நிர்வாகிகள் கூறும்போது, நோயால் பாதிக்கப்பட்டவர்களை இந்த கடுமையான வெயில் காலத்தில் சொந்த ஊருக்கு அனுப்பியதை வன்மையாக கண்டிக்கிறோம். சொந்த ஊருக்கு செல்லும் போது பாதிக்கப்பட்ட மாணவர்களால் மற்றவருக்கு இந்த நோய் பரவக்கூடிய அபாயம் உள்ளது. மேலும் குறிப்பாக அவர்கள் வீட்டில் இருக்கக்கூடிய குடும்பத்தினர் மற்றும் உறவினருக்கும் இந்த நோய் பரவும். ஆகையால் மீதமுள்ள மாணவர்களுக்கு தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அவர்களுக்கு அம்மை நோய் பரவாமல் இருக்க தடுப்பூசி போட வேண்டும். தொடர்ந்து அவர்களை கண்காணிக்க CMS நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.