காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்த பயணத்தின் போது தொழில் முதலீட்டாளர்கள், அமெரிக்க வாழ் இந்தியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரை சந்தித்து வருகிறார். இதில் நேற்று அமெரிக்காவின் ஸ்டான்ட்போர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்திய மாணவர்களிடையே ராகுல்காந்தி உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:- 2000 ம் ஆண்டு முதன்முதலாக அரசியலில் நுழைந்தபோது தகுதி நீக்கம் போன்ற கடுமையான தண்டனைகள் எல்லாம் சாத்தியமில்லை எனக் கருதினேன். ,ஆனால் தற்போது அதனை நிகழ்கால யதார்த்தமாக கண்முன்னே பார்த்து வருகிறேன்.
பதவியிலிருந்து தாம் தகுதி நீக்கம் செய்யப்படுவோம் என்று கற்பனையில் கூட நினைத்ததில்லை. எம்.பி. பதவியில் இருந்து நீக்கி எனக்கு அளிக்கப் பட்ட தண்டனையானது, மக்களை சந்திப்பதற்கும் மக்களுக்கு சேவையாற்றுவதற்கும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளதாக கூறிய அவர் உண்மையிலேயே இது மிகப்பெரிய வாய்ப்பு எனவும் இந்த வழியில்தான் தற்போதைய அரசியல் செயல்படுவதாகவும் கூறியுள்ளார்.
இந்த பிரச்சினைகள் 6 மாதங்களுக்கு முன்னரே தொடங்கியதாக கூறிய அவர், பெரும் நிதி ஆதிக்கமும் நிறுவன கட்டமைப்பும் நாட்டை ஆண்டு வருகிறது. ஒட்டுமொத்த எதிர்கட்சிகளும் இந்தியாவில் ஒன்று சேர்ந்து போராடி வருகின்றன. அவதூறு வழக்கில் அதிகபட்ச தண்டனை பெற்று மக்களவையில் இருந்து நீக்கப்பட்ட முதல் நபர் நான் தான் என அவர் குறிப்பிட்டார். ராகுல் காந்தி சிலிக்கான் பள்ளத்தாக்கு சார்ந்த ஸ்டார்ட்அப் தொழில் அதிபர்களுடன் நேரத்தை செலவிட்டார். அப்போது தனது ஐபோன் ஒட்டு கேட்கப்படுவதாகவும், அதைப் பற்றி கவலைப்படவில்லை என்றும் கூறினார். அவர் தனது ஐபோனில் “ஹலோ! மிஸ்டர் மோடி” என்று நகைச்சுவையாக பேசினார். மேலும் ஒரு தேசமாகவும் ஒரு தனிநபராகவும் தகவலின் தனியுரிமை தொடர்பாக உங்களுக்கு நிறுவப்பட்ட சட்டங்கள் தேவை என கூறினார்.