கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த மே 10 ம் தேதி கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவை நடத்தியது. மே 13 ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இதில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் பெரும்பான்மை பலத்துடன் பிரம்மாண்ட வெற்றிபெற்றது. முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டிகே சிவகுமாரும் பதவியேற்றனர். காங்கிரஸ் கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியமைப்பதற்கு மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, டிகே சிவக்குமார்,
சித்தராமையா போன்ற பலரை காரணமாக சொல்லலாம். இவர்களைபோல் கர்நாடக தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றிபெற முக்கிய காரணமாக இருந்தவர் சுனில்.
பிரசாந்த் கிஷோரை போன்றே தேர்தல் வியூக நிறுவனத்தை நடத்தி வருகிறார். பல்வேறு மாநில சட்டசபைத் தேர்தலில் பல்வேறு கட்சிகளின் தேர்தல் பிரசாரங்கள் உட்பட பல்வேறு முடிவுகளை எடுப்பதற்கான வியூகங்களை வகுத்துக் கொடுத்தவர். கடந்த 2021 ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அதிமுகவின் தேர்தல் வியூகங்களை வகுக்க இவரது நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதில் அதிமுக தோல்வியடைந்தாலும், கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸுக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து இருக்கிறார் சுனில் கனுகோலு.
மைண்ட் ஷேர் அனாலிடிக்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் இவர் இதற்கு முன்பாக திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் தேர்தல் வியூக வகுப்பாளராகவும் சுனில் பணியாற்றியுள்ளார். பிரசாந்த் கிஷோருடன் இணைந்து பணியாற்றி வந்த சுனில், 2014 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பிரசாரங்களுக்கு வியூகம் வகுத்து கொடுத்தவராவார். விரைவில் இவர் காங்கிரஸ் கட்சியிலும் இணையலாம் என்று கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், காங்கிரஸ் தேர்தலில் வெற்றிபெற்று தான் மீண்டும் முதலமைச்சராக காரணமாக சுனிலுக்கு மிகப்பெரிய பரிசை அளித்து இருக்கிறார், தேர்தலில் வேட்பாளராக சுனிலுடன் பயணித்த சித்தராமையா, முதலமைச்சராகவும் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்பி உள்ளார். ஆம், முதலமைச்சரின் தலைமை ஆலோசகராக சுனிலை நியமனம் செய்து இருக்கிறார் சித்தராமையா. மாநில கேபினட் அமைச்சருக்கு நிகரான அந்தஸ்துடன் சுனிலை தன்னுடைய ஆலோசகராக சித்தராமையா நியமனம் செய்து உள்ளார். கர்நாடகா மாநிலம் பெல்லாரியை சேர்ந்த சுனில், சென்னையிலேயே தங்கி வருகிறார்.