வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மேதேயி சமுதாய மக்கள் எஸ்.டி. அந்தஸ்து கோரி வருகின்றனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து குகி, நாகா உள்ளிட்ட பழங்குடியின மாணவர் சங்கம் சார்பில் கடந்த 3-ம் தேதி பேரணி நடைபெற்றது.
இதனால் மேதேயி சமுதாயத்தினருக்கும் பிற பழங்குடியின சமுதாயத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் வன்முறை பரவியது. இதையடுத்து, ராணுவம், அசாம் ரைபிள்ஸ் படையினர், சிஆர்பிஎப் வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். கலவரத்துக்கு இதுவரை 75-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பின்னர் படிப்படியாக இயல்பு நிலை திரும்பியது.
இதனிடையே, மேதேயி மற்றும் குகி சமுதாய பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், கடந்த 27-ம் தேதி இரவு பல பகுதிகளில் மீண்டும் கலவரம் மூண்டது. இந்த கலவரம் 28-ம் தேதியும் நீடித்தது. குறிப்பாக செரு மற்றும் சுக்னு பகுதிகளில் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் பல்வேறு குடியிருப்புகளை தீயிட்டு கொளுத்தியதாகக் கூறப்படுகிறது. உரிபோக் பகுதியில் பாஜக எம்எல்ஏ வைராக்பம் ரகுமணியின் இல்லம் தாக்கப்பட்டதுடன் அங்கிருந்த 2 வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.
இந்த வன்முறையில் போலீஸார் உட்பட மொத்தம் 5 பேர் உயிரிழந்ததாகவும் 12 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா மணிப்பூர் மாநிலம் இம்பாலுக்கு நேற்று மாலை சென்றார். 3 நாள் பயணமாக சென்றுள்ள அவர் அங்கு நிலவும் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து இன்று ஆய்வு செய்தார். இந்தநிலையில், மணிப்பூரில் கலவரத்தின் போது இறந்தவர் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மத்திய மற்றும் மணிப்பூர் மாநில அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கலவரத்தில் இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என்றும் இழப்பீட்டுத் தொகையை மத்திய, மாநில அரசுகள் சமமாக ஏற்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா மற்றும் முதல்-மந்திரி என் பிரேன் சிங் இடையே நேற்று இரவு நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அக்கூட்டத்தில் இழப்பீட்டுத் தொகை அறிவிக்க முடிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.