ஆமதாபாத்தில் நேற்று இரவு நடந்த 16வது ஐபிஎல் இறுதிப்போட்டியில் சிங்கத்தை அதன் குகையிலேயே போய் வீழ்த்துவது போல ஒரிஜினல் சிங்கமான சிஎஸ்கே குஜராத் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது. இதன் மூலம் சென்னை அணி 5வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.
சென்னை அணியான சிஎஸ்கேவில் தமிழக வீரர்கள் ஒருவருமில்லை. அனைவரும் வெளிமாநிலம், மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள். இவர்களில் சென்னை வெற்றிக்கு காரணமான ஜடேஜா குஜராத்தை சேர்ந்தவர். அவர் தனது சொந்த மண்ணின் அணியை எதிர்த்து தமிழக அணியில் ஆடி வருவதுடன், இறுதிப்போட்டியில் குஜராத்தை வீழ்த்த அவரே முக்கிய காரணமாகவும் இருந்தார்.
இதுபோல குஜராத் அணியில் தமிழ்நாட்டை சேர்ந்த சாய் சுதர்ஷன், சாய் கிஷோர், விஜய் சங்கர் ஆகிய 3 வீரர்கள் இடம் பெற்று இருந்தனர். இவர்களில் நேற்று சென்னைக்கு எதிராக இறுதிப்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்ஷன் 96 ரன்கள் குவித்தார். குஜராத் ஒருவேளை வெற்றி பெற்று இருந்தால் அந்த வெற்றிக்கு காரணமாக தமிழக வீரர் சாய் சுதர்ஷன் தான் இருந்திருப்பார்.
ஆனால் அவருக்கு அதிர்ஷ்டம் இல்லை. 100 ரன்கள் எடுப்பார் என நினைத்தபோது, கடைசி நேரத்தில் அவுட் ஆகி விட்டார். ஆனால் சாய் சுதர்ஷனின் ஆட்டத்தை குஜராத் கேப்டன் பாண்டியா வானளாவ புகழ்ந்தார்.
இந்த நிலையில் சென்னை வெற்றி பெற்றதும் சென்னை வீரர்கள் ஐபிஎல் கோப்பையுடன் போஸ் கொடுத்தனர். இறுதிப்போட்டியை பார்க்க பல வீரர்களின் குடும்பத்தினரும் வந்திருந்தனர். அவர்களும் அந்த கோப்பையுடன் போட்டோ எடுத்துக்கொண்டனர்.
குறிப்பாக ஜடேஜா குஜராத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது குழந்தை, மனைவி ஆகியோரும் வந்திருந்தனர். அவர்களும் கோப்பையுடன் போஸ் கொடுத்தனர். இறுதியாக சென்னை வீரர்கள் குழந்தை குட்டிகளுடன் அனைவரும் ஐபிஎல் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.