திருச்சி எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்தவர் மனோஜ் குமார்(33). இவருக்கு ஷோபனா ( 26) என்ற மனைவியும் தஷ்வண் ( 3), கபிஷன் என்ற 11 மாத குழந்தையும் உள்ளது. பர்னிச்சர் கடை உரிமையாளரான மனோஜ்குமாருக்கு தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக சொந்தத்தொழிலை விட்டுவிட்டு தற்போது ஸ்ரீரங்கத்தில் உள்ள சாந்தி பர்னிச்சரில் பணிபுரிந்து வருகிறார். தொழிலில் நஷ்டமடைந்த பின் அவ்வப்போது குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் பணி நிமித்தமாக மனோஜ் கொடைக்கானல் சென்று விட்டு நேற்று வீடு திரும்பிய போது வீட்டின் கதவு தாழிடப்பட்டிருந்தது. நீண்ட நேரமாக கதவைத் தட்டியும் திறக்காத காரணத்தால் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தபோது தனது மனைவி மற்றும் குழந்தைகள் தூக்கிட்ட நிலையில் தொங்கியதை கண்டு மனோஜ் குமார் அலறினார். இது குறித்து அக்கம் பக்கத்தில் வசிப்போர் எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்த எடமலைப்பட்டி புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த உடல்கள் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் திருச்சியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.