முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக டெண்டர் முறைகேடு தொடர்பாகவும், வருமானத்துக்கு அதிகமாக 58 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாகவும் 2 வழக்குகளை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்தனர். இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்.பி.வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. அதேசமயம், அவருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டது. இதையடுத்து எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது என உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு விவகாரத்தில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தது. இதனைத்தொடர்ந்து, சொத்துக் குவிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது என்ற உயர் நீதிமன்றம் உத்தரவுக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.