தஞ்சாவூர் மாநகராட்சியில் 51 வார்டுகளில் 2. 65 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மருத்துவ சேவை வழங்க ஏற்கனவே கள்ளுக்குளம், கரந்தை, சீனிவாசபுரம், மானம்புச்சாவடி ஆகிய 8 இடங்களில் துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. மக்களுக்கு அவர்கள் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே மருத்துவ சேவை உடனடியாக கிடைக்கும் வகையில் 5000 பேர் வசிக்கும் பகுதியில் தலா ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் அமைக்க தமிழக அரச திட்டமிட்டது.
இதன்படி தஞ்சாவூர் மாநகராட்சியில் வண்டிக்கார தெரு, சின்னையா பிள்ளை தெரு, அண்ணா நகர், ஏஒய்ஏ நாடார் தெரு, பூமால் ராவுத்தன் கோவில் தெரு, நாலு கால் மண்டபம் ஆகிய ஆறு இடங்களில் முதல் தொகுப்பில், அதனை தொடர்ந்து பள்ளி அக்ரகாரம், டவுன் கரம்பை ஆகிய இரண்டு இடங்களில் இரண்டாவது தொகுப்பிலும், நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் கட்டி முடிக்கப்பட்டன.
15 வது மானிய குழு நிதியத்தில் கட்டப்பட்ட இந்த மையங்கள் அனைத்தும் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும் மாலை 4 முதல் இரவு 8 மணி வரை செயல்படும்.
இந்த மையங்களில் ஒரு மருத்துவர் செவிலியர் சுகாதார ஆய்வாளர் மருந்தாளுநர் பணியில் இருப்பர். நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் பணிகள் முடிவடைந்த நிலையில் விரைவில் திறப்பு விழா காண உள்ளன.