விழுப்புரம் மாவட்டம் பஞ்சமாதேவி என்ற இடத்தில், தனியார் பேருந்து ஒன்று சாலையோர பள்ளத்தில் பலத்த சத்தத்துடன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் பேருந்தில் இருந்தவர்கள் அபய குரல் எழுப்பினர். பேருந்து விபத்தில் சிக்கியதை அறிந்த அப்பகுதி மக்கள் விரைந்து சென்று பேருந்தில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பேருந்து திண்டிவனத்திலிருந்து நெய்வேலி சென்ற போது பஞ்சமாதேவி என்ற இடத்தில் எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் தவிர்க்க முயன்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.