தமிழ்நாடு முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட 100 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.
கரூரில் சோதனைக்கு வந்த அதிகாரிகளை திமுக தொண்டர்கள் முற்றுகையிட்டு, அடையாள அட்டையை கேட்டனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒரு அதிகாரி திமுக தொண்டரை தாக்கினார். இதனால் திமுகவினர் ஒரு காரின் கண்ணாடியை சேதப்படுத்தினர். இந்த நிலையில் வருமானவரித்துறை அதிகாரிகள் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என கரூர் எஸ்.பி. ஆபீசுக்கு வந்து எஸ்.பி. சுந்தரவதனத்தை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
அதைத்தொடா்ந்து அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு அளிக்கப்பட்டது. வருமான வரி சோதனை நடக்கும் இடங்களில் மொத்தம் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஒவ்வொரு வருமான வரி அதிகாரியின் காரிலும் போலீசாரும் சேர்ந்து மீண்டும் சோதனைக்கு புறப்பட்டு சென்றனர்.