சென்னையை தவிர மீதமுள்ள 37 மாவட்டங்களில், 25 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளதையடுத்து விடுபட்ட 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து, தலைமைச் செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:- அரியலூர்- சிறுகுறு தொழில்துறை செயலர் வி.அருண்ராய், கோயம் புத்தூர்- டிட்கோ மேலாண் இயக்குநர் ஜெயஸ்ரீமுரளிதரன், கள்ளக்குறிச்சி- நெடுஞ்சாலைத்துறை செயலர் பிரதீப் யாதவ், காஞ்சிபுரம்- ஊரக வளர்ச்சி செயலர் பி.செந்தில்குமார், நாகப்பட்டினம்- எரிசக்தித்துறை செயலர் ரமேஷ் சந்த் மீனா,
நாமக்கல்- தகவல் தொழில்நுட்பத்துறை செயலர் ஜெ.குமரகுருபரன், புதுக்கோட்டை – நில நிர்வாக ஆணையர் எஸ்.நாகராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம்- மனிதவள மேலாண்மைத்துறை செயலர் கே.நந்தகுமார், ராணிப்பேட்டை- தேசிய சுகாதார இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ்,
சேலம்- தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குநர் பி.சங்கர்,
திருப்பத்தூர்- சுகாதாரத்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி, திருப்பூர்- டான்சி மேலாண் இயக்குநர் எஸ்.விஜயகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள், நீர் பாதுகாப்பு, குடிமராமத்து, தடுப்பணை கட்டுதல், கிராமக் குட்டைகள், ஊரணிகள், கோயில்குளங்கள், சிறு பாசன ஏரிகள் மற்றும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பாசன ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளை புனரமைத்தல், போர்க்கால அடிப் படையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளை பாதுகாத்தல் ஆகியவற்றை அதிகளவு மக்கள் பங்களிப்புடன் மேற்கொள்ளும் பணிகளை கண்காணிப்பார்கள்.
அரசின் முன்னோடி திட்டங்களை விரைவாக அமல்படுத்த நடவடிக்கை எடுப்பார்கள். நிலுவையில் உள்ள அதிகளவிலான பட்டா பரிமாற்றம் தொடர்பாக சிறப்பு முகாம் நடத்துதல், ஆக்கிரமிப்புகள் வரன்முறைப் படுத்துதல், குடியிருப்பு பகுதிகளை சுத்தப்படுத்துதல், சாலை, குடிநீர், தெருவிளக்கு, கழிவறை, திடக்கழிவு மேலாண்மை ஆகிய அடிப்படை வசதிகளை செய்து தருதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.