டில்லியின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிறையில் உள்ள குளியலறையில் சத்யேந்தர் ஜெயின் இன்று திடீரென விழுந்தார். உடனடியாக அவரை சிறை அதிகாரிகள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒரு வாரத்திற்குள் 2வது முறையாக அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை சிறையின் பாத்ரூமில் விழுந்ததில் அவரது முதுகெலும்பில் அடிபட்டது.
இந்த காயத்திற்காக அவர் சப்தர்ஜங் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், மீண்டும் இன்று பாதிக்கப்பட்டுள்ளார். அவர் தனது இடுப்பில் பெல்ட் அணிந்து மிகவும் பலவீனமாக காணப்படுகிறார். அவர் கைது செய்யப்பட்டதில் இருந்து சுமார் 35 கிலோ வரை உடல் எடை குறைந்திருப்பதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. சத்யேந்திர ஜெயின் ஆஸ்பத்திரியில் இருக்கும் புகைப்படத்தை கெஜ்ரிவால் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் நலம்பெற பிரார்த்தனை செய்வதாக கூறி உள்ளார். சத்யேந்தர் ஜெயின் ஆதரவாளர்களும் கட்சி தொண்டர்களும் அவரது உடல்நிலை குறித்து கவலையை தெரிவித்துள்ளனர். மேலும் அவரை கொல்ல பாஜக முயற்சிப்பதாக குற்றம்சாட்டி உள்ளனர். இந்த குற்றச்சாட்டுகளுக்கு பாஜக பதில் அளித்துள்ளது. கைது செய்யப்படுவதற்கு முன்பு சத்யேந்திர ஜெயின் அதிக உடல் எடையுடன் இருந்ததாகவும், இப்போது எடை குறைந்து சரியான அளவில் இருப்பதாகவும் பாஜக தெரிவித்துள்ளது.