பிரதமர் மோடி ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு கடந்த 19-ந் தேதி சுற்றுப்பயணத்தை தொடங்கினார். நேற்று முன்தினம் இரவு, பசிபிக் தீவு நாடான பப்புவா நியூகினியா சென்றார். இந்திய பிரதமர் ஒருவர் அந்நாட்டுக்கு செல்வது இதுவே முதல்முறை ஆகும். தலைநகர் மோர்ஸ்பி விமான நிலையத்தில் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மரப், மோடியின் பாதங்களை தொட்டு வணங்கினார். இந்நிலையில், நேற்று மோர்ஸ்பி நகரில் நடந்த நிகழ்ச்சியில், பப்புவா நியூகினியா நாட்டின் அலுவல் மொழியான டோக் பிசின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட ‘திருக்குறள்’ நூலை பிரதமர் மோடியும், பப்புவா நியூகினியா பிரதமர் ஜேம்ஸ் மரப்பும் கூட்டாக வெளியிட்டனர். இந்த நூலை தமிழர்களான வெஸ்ட் நியூ பிரிட்டன் மாகாண கவர்னர் சசிந்திரனும், அவருடைய மனைவி சுபா சசிந்திரனும் மொழிபெயர்த்துள்ளனர். அவர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:- பப்புவா நியூகினியாவில், பிரதமர் ஜேம்ஸ் மரப்பும், நானும் திருக்குறள் நூலை வெளியிடும் கவுரவத்தை பெற்றோம். திருக்குறள், அடையாள சின்னமான படைப்பு. வெவ்வேறு துறைகள் பற்றிய ஆழ்ந்த சிந்தனைகளை அப்புத்தகம் வெளிப்படுத்துகிறது. கவர்னர் சசிந்திரனும், சுபா சசிந்திரனும் இதை டோக் பிசின் மொழியில் மொழிபெயர்க்க எடுத்துக்கொண்ட முயற்சிகளை பாராட்டுகிறேன். சசிந்திரன், பள்ளிப்படிப்பை தமிழில் படித்தவர். சுபா சசிந்திரன், ஒரு மொழியியல் வல்லுனர் என்று அவர் கூறியுள்ளார்.
மோர்ஸ்பி நகரில் நடந்த நிகழ்ச்சியில், பிஜி தீவின் உயரிய விருதான ‘கம்பேனியன் ஆப் தி ஆர்டர் ஆப் பிஜி’ என்ற விருதை பிரதமர் மோடிக்கு பிஜி பிரதமர் சிதிவேனி ரபுகா வழங்கினார். அதை பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி, இந்திய மக்களுக்கும், இந்தியா-பிஜி தீவு இடையிலான விசேஷ உறவுக்கு முக்கிய பங்கு வகித்த பிஜி தீவுவாழ் இந்தியர்களுக்கும் அர்ப்பணிப்பதாக அறிவித்தார். மேலும், அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், ”இவ்விருது, இந்தியாவுக்கு கிடைத்த கவுரவம். இந்தியா-பிஜி தீவு இடையிலான வலிமையான உறவுக்கு அங்கீகாரம்” என்று கூறியுள்ளார். பப்புவா நியூகினியா விருது அதைத்தொடர்ந்து, பப்புவா நியூகினியா நாட்டின் உயரிய விருதான ‘கிராண்ட் கம்பேனியன் ஆப் தி ஆர்டர் ஆப் லோகோகு’ என்ற விருதை கவர்னர் ஜெனரல் சர் பாப் டாடே, பிரதமர் மோடிக்கு வழங்கினார். பசிபிக் தீவு நாடுகளின் ஒற்றுமைக்கு பாடுபட்டதற்காக இவ்விருது வழங்கப்பட்டது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கிளிண்டன் போன்ற ஒருசில வெளிநாட்டினருக்கு மட்டுமே இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது.
தலைவர்களுடன் சந்திப்பு மோர்ஸ்பி நகரில், இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள 14 பசிபிக் தீவு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி தனித்தனியாக சந்தித்து பேசினார். பிஜி தீவு பிரதமர் சிதிவேனி ரபுகா, பப்புவா நியூகினியா பிரதமர் ஜேம்ஸ் மரப் ஆகியோருடன் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.