கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்த எழுதியாம்பட்டி கிராமத்தில் வசிப்பவர் கருப்பாயி. இவருக்கு மகாமுனி என்கின்ற கணவரும், மகன், மருமகள், பேரக் குழந்தைகள் உள்ளனர். சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக அந்த கிராமத்தில் வசித்து வருவதாகவும், கடந்த 1993ம் ஆண்டு இவர்களது பெயரில் குளித்தலை வட்டாட்சியர் பட்டா வழங்கியுள்ளார். கூலி வேலைக்காக வெளியூர் சென்ற நேரத்தில் பக்கத்து வீட்டுக்காரர் அந்த இடத்திற்கு பட்டா வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. மீண்டும் அங்கு வந்த இவர்கள் தங்களது இடத்தில் பல லட்சம் செலவு செய்து புதிதாக வீடு கட்டியுள்ளனர். பக்கத்து வீட்டுக்காரரின் வாரிசுகள் அந்த இடம் தனது அத்தை பெயரில்
பட்டா இருப்பதாக கூறி பிரச்சினை செய்வதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக விசாரணை செய்து தங்கள் பெயரில் பட்டா வழங்கக் கோரி வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பெயர் மாற்றம் செய்து தராமல் அலைக்கழித்து வருவதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி கருப்பாயி, அவரது கணவர், மருமகள் மற்றும் பேரன், பேத்தியுடன் உடலில் மண்ணென்னை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். தகவலறிந்து அங்கு வந்த குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் கெளசல்யா, கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் மோகன்ராஜ் ஆகியோர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, ஒரு வார காலத்தில் பெயர் மாற்றம் செய்து பட்டா வழங்குவதாக தெரிவித்தனர். அப்போது கோட்டாட்சியர் காலில் பெண்மணி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர்களை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.