தஞ்சாவூர் கீழவாசலில் அனுமதி பெற்ற டாஸ்மாக் பார் செயல்பட்டு வருகிறது. இதில் மது அருந்திய மீன் வியாபாரியான குப்புசாமி (68), பூமான்ராவத்தன் கோயில் தெருவைச் சேர்ந்த கார் ஒட்டுநர் குட்டி விவேக் (36) ஆகியோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நேற்றிரவு தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட எஸ்பி ஆஜிஷ் ராவத் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது… “தஞ்சை பாரில் மது அருந்தி குப்புசாமி, விவேக் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். இருவரின் உடல்களும் போஸ்ட்மார்டம் செய்யப்பட்டு கல்லீரல் உள்ளிட்ட மாதிரிகள் எடுக்கப்பட்டு தஞ்சாவூர் மண்டல தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன. இந்த ஆய்வறிக்கையில் இருவரின் மரணத்திற்கு மெத்தனால் ஆல்கஹால் இல்லை என்பதும், சயனைடு போன்ற விஷம் குடலில் இருந்ததும் தெரிய வந்தது.
உயிரிழந்த விவேக்குக்கு குடும்ப பிரச்னை காரணமாக அவர் மனைவியை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதேபேல் குப்புசாமிக்கும் பல்வேறு பிரச்சனைகளும் இருந்துள்ளன. இருவரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து மாவட்ட எஸ்பி தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த விசாரணையின் முடிவில் தான் இறப்பிற்கான முழு காரணம் விவரமும் தெரியவரும். இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கண்டிப்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்… இந்த நிலையில் விவேக் மற்றும் குப்புசாமியும் ஏற்கனவே தங்களது நண்பர்களிடம் விஷ சாராயத்துக்கு பலியானால் 10 லட்சம் கிடைக்கும் தானே? கடந்து 3 நாட்களாக கூறி வந்துள்ளனர். எனவே 10 லட்சத்திற்கு ஆசைப்பட்டு அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? என்கிற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்..