சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டம் கட்சித் தலைவரான முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, பொன்முடி, கனிமொழி எம்.பி., ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், திருச்சி சிவா, பூச்சி முருகன் உள்பட 40-க்கும் மேற்பட்ட பிரமுகர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், கலைஞரின் நூற்றாண்டு விழா வரும் ஜூன் 3-ந் தேதி தொடங்குகிறது. தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையினர் அவரை என்றென்றும் நினைவில் கொள்ளும் வகையில் நூற்றாண்டு விழாவினை எழுச்சியோடும், உணர்ச்சியோடும் எங்கெங்கும் நடத்திட வேண்டும், ஜூன் 3-ந் தேதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் கலைஞர் நூற்றாண்டு விழாப் பொதுக் கூட்டம் வட சென்னையில் நடைபெற இருக்கிறது. ஜூன் 20ம் தேதி திருவாரூரில் எழிலுற அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தினை பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் திறந்து வைக்கிறார். கலைஞரின் நூற்றாண்டு விழாவை ஜூன் 3-ந் தேதி தொடங்கி, 2024 ஜூன் 3-ந் தேதி வரை ஓராண்டு காலத்திற்கு தொடர்ச்சியான நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டு நடத்திட வேண்டும். மாவட்டங்கள் தோறும் அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி, அனுமதி பெற்று, “எங்கெங்கும் கலைஞர்” என்ற அடிப்படையில், கலைஞரின் முழு உருவச் சிலை, மார்பளவு சிலைகளை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.