கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதமர் மோடி நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த சூழலில் 2000 ரூபாய் நோட்டுகள் அக்டோபர் 1ம் தேதி முதல் செல்லாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுகள் படிப்படியாக திரும்பப் பெறப்படும் என்றும் வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 30-ம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்த சூழலில் டாஸ்மாக் கடைகளில் பணியாற்று ஊழியர்கள் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க கூடாது என்று உத்தரவு அளிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று (மே 20ம் தேதி ) முதல் 2000 ரூபாய் நோட்டுகள் மதுக்கடையில் எக்காரணம் கொண்டும் வாங்க கூடாது என்றும் அப்படி மீறி வாங்கினால் அதற்கு சம்பந்தப்பட்ட கடை மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தான் பொறுப்பு. அத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், டாஸ்மாக் கடைகளில் ரூ.2,000 வாங்க கூடாது என்பது முற்றிலும் தவறான செய்தி..இது போல எந்த சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை.. என்று பதிவிட்டுள்ளார்.