மீன்பிடி தடை காலங்களில் தமிழக மீனவர்கள் அவர்களது விசைப்படகுகளை பழுது நீக்குவது புதிய இன்ஜின்கள் பொருத்துவது வழக்கம். அவ்வாறு பொருத்தும் எஞ்சின்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளோடு உள்ளதா? என்பது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி நாகை மாவட்டத்தில் உள்ள 500, க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை மீன்வளத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர். நாகை துறைமுகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வில் நாகை மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஜெயராஜ், தர்மபுரி உதவி இயக்குனர் கோகுலரமணன் உள்ளிட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் 11, குழுக்களாக பிரிந்து சென்று விசைப்படகுகளுக்கு அனுமதிக்கப்பட்ட நீளம் சரியாக உள்ளதா? என்றும் பச்சை வண்ணங்கள்
பூசப்பட்டு லைசென்ஸ் எண்கள் தெளிவாக எழுதப்பட்டுள்ளதா? என்றும் லைஃப் ஜாக்கெட், மற்றும் வாக்கி டாக்கி உள்ளிட்ட சாதனங்களை சரி பார்த்தனர் .மேலும் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி மற்றும் இரட்ட மடி வலைகள் படகுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா? என சோதனையிட்ட மீன்வளத்துறை அதிகாரிகள், அதிக குதிரைத்திறன் கொண்ட சீன எஞ்சின்கள் உள்ளதா? என்றும் படகின் அடியில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது மீனவர்கள் தங்களது விசைப்படகு உரிமத்திற்கான அட்டை, மானிய டீசல் புத்தகம் உள்ளிட்டவைகளை கொண்டுவந்து மீன்வளத்துறை அதிகாரியிடம் காண்பித்து ஒப்புதல் பெற்று கொண்டனர்.