சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில், சென்னை மதுரவாயலைச் சேர்ந்த அசோக் சக்கரவர்த்தி என்ற கிரிக்கெட் ரசிகர் தாக்கல் செய்த மனுவில், “கடந்த மார்ச் மாதம் முதல் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட்டின் ஏழு போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டிகளுக்கான ஆன்லைன் மற்றும் நேரடி டிக்கெட்டுகள் விற்பனை செய்ததில் முறைகேடுகள் நடந்துள்ளன.
மே 23, 24ம் தேதிகளில் தகுதி சுற்றுப் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், ஆன்லைன் மூலம் நடந்த டிக்கெட் விற்பனையில் முறைகேடுகள் நடந்துள்ளது. இப்போட்டிகளுக்கான பெரும்பாலான டிக்கெட்டுகள் கள்ளச்சந்தையில் விற்கப்படுகிறது. எனவே, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஏழு போட்டிகளின்போது ஆன்லைன் மூலம் விற்கப்பட்ட டிக்கெட்டுகள் குறித்த விவரங்களை சமர்ப்பிக்க பிசிசிஐ, சென்னை சூப்பர் கிங்ஸ், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.