கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. சுற்றியுள்ள மதுப்பிரியர்கள் அங்கு வந்து மது பாட்டில்களை வாங்கி செல்வதும் மது அருந்தி செல்வதும் வழக்கம்.
நேற்று மாலை லாலாபேட்டை போலீசார் டாஸ்மாக் கடையின் வாசல் அருகிலேயே நின்று கடையில் இருந்து பைக்கில் வரும் மதுப்பிரியர்களை மடக்கிப்பிடித்து அபராதம் விதித்து உள்ளனர்.
பொதுவாக போலீசார் பைபாஸ் சாலைகளில் மது அருந்திவிட்டு வருபவர்களை வாகன தணிக்கையில் ஈடுபட்டு அபராதம் விதிப்பது வழக்கம்.
ஆனால் மாறாக குளித்தலை கோட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு சென்று அங்கு மது அருந்திவிட்டு வெளியே வருபவர்கள், மது பாட்டில்களை வாங்கி வரும் மது பிரியர்களையும் பிடித்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.
அதேபோல் நேற்று லாலாபேட்டை போலீசார் மேட்டு மகாதானபுரம் டாஸ்மாக் கடை வாசல் அருகே நின்று மது அருந்தி வந்தவர்கள் மட்டுமில்லாமல் மது பாட்டில்களை வாங்கி வந்த நபர்கள் மீதும் மது அருந்தி வந்ததாக வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து இருசக்கர வாகனங்களை எடுத்துச் சென்றனர். கடை அருகிலேயே நின்று போலீசார் இவ்வாறு நடவடிக்கை எடுப்பதால், மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு கட்டத்தில் போலீசாருக்கும் மது பிரியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதிக அளவில் மது பிரியர்கள் அங்கு குவிந்ததால் போலீசார் அங்கிருந்து சென்று விட்டனர்.
மேலும் லாலாபேட்டை போலீஸாரின் நடவடிக்கையை கண்டித்து மது பிரியர்கள் பழைய ஜெயங்கொண்டம் மகாதானபுரம் சாலையின் குறுக்கே அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுக்கடை அருகிலேயே நின்று போலீசார் நடவடிக்கை எடுப்பதை விட அந்த கடையை போலீசாரே மூடிவிட வேண்டியது தானே என கேட்கிறார்கள்.