காணொலி மூலம் மாணவர்களுக்கு வைவா நடத்தப்பட்டது. பின்னர் வேலைவாய்ப்புகளுக்கான நேர்முகத்தேர்வு காணொலியில் நடத்தப்பட்டது. பின்னர் அரசு விழாக்கள் காணொலியில் நடத்தப்பட்டது. மருத்துவ சிகிச்சைகளும் காணொலி மூலம் நடத்தப்பட்டது. அறிவியல், தொழில் நுட்ப வளர்ச்சியினால்இப்போது திருமணங்களும் காணொலி மூலம் நடத்தும் நிலை ஏற்பட்டு உள்ளது. ஆனால் சாந்தி முகூர்த்தம் காணொலியில் நடத்த வாய்ப்பு இன்னும் ஏற்படவில்லை.
இனி காணொலி மூலம் திருமணம் நடத்த ஐகோர்ட் உத்தரவிட்டதை பார்ப்போம். சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்பவர்கள் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரடியாக வர வேண்டும். மணமக்களும், சாட்சிகளும் பதிவாளர் முன்பு நேரடியாக ஆஜரானால் மட்டுமே திருமணத்தை பதிவு செய்ய முடியும். இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு திருவனந்தபுரத்தை சேர்ந்த தன்யா மார்ட்டின் என்பவர் திருவனந்தபுரம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், தான் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்ய மனு அளித்து உள்ளேன். ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாட்டில் உள்ள தனது காதலனால் உடனடியாக ஊருக்கு வர முடியாது என்பதால் காணொலி மூலம் திருமணத்தை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். வேறு சிலரும் இதேபோல காணொலி மூலம் திருமணத்திற்கு அனுமதி கோரி கேரளாவில் உள்ள பல்வேறு கோர்ட்டுகளில் மனு தாக்கல் செய்தனர்.
அதை ஏற்க மறுத்த கோர்ட்டுகள் இதுதொடர்பாக கேரள ஐகோர்ட்டின் பரிசீலனைக்கு மனுக்களை அனுப்பி வைத்தன. இந்த மனுக்களை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் முகமது முஷ்டாக், சோபி தாமஸ் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணங்களை காணொலி மூலம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டது. 2000-ம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி மின்னணு ஆவணங்களுக்கு சட்டத்தில் அனுமதி உண்டு என்பதால் காணொலி மூலம் திருமணம் நடத்துவதில் தவறில்லை என்று நீதிபதிகளின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.