கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. திருமலையில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 30 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிலா தோரணம் வரை வரிசையில் காத்திருந்தனர். இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூறியதாவது:- திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. மூலவர் ஏழுமலையானை தரிசிக்க 30 மணி நேரம் ஆகும். எனவே பக்தர்கள் தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும். திருமலையில் கடந்த சிலநாட்களாக பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நீண்ட தூரம் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ், நாராயணகிரி தோட்டத்தில் உள்ள கொட்டகைகள் ஆகியவற்றில் பக்தர்கள் நிரம்பி உள்ளனர். நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து மாலை 5 மணி வரை 36 ஆயிரத்து 900 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் 79 ஆயிரத்து 207 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 41 ஆயிரத்து 427 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.3 கோடியே 19 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.