மயிலாடுதுறை 4ம்நம்பர் புது தெருவில் மேட்டுத்தெரு குளம் உள்ளது. இந்த குளத்தில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக அப்பகுதி மக்கள் மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை போலீசார் குளத்தில் கிடந்த 30 வயது மதிக்கத்தக்க அழுகிய நிலையில் உள்ள சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இறந்து கிடந்தவர் பச்சை கலரில் கோடு போட்ட சட்டை அணிந்துள்ளார், யார் என்று அடையாளம் காண முடியாததால் இரண்டு மூன்று தினங்களில் காணாமல் போனவர்களின் விவரங்களின் அடிப்படையிலும், குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கட்டிட வேலைக்கு வந்தவர்கள் யாராவது காணாமல் போய் உள்ளனரா, வழிப்போக்கர்கள் ஆக வந்தவர்கள் யாராவது தவறி விழுந்து விட்டனரா என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் மயிலாடுதுறை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அழுகிய நிலையில் உள்ள சடலங்களை பிரேதபரிசோதன செய்வதற்கு மருத்துவர்கள் (ஸ்பெசலிஸ்ட்) இல்லாததால் உடல் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கூடுதல் பணி சுமை ஏற்பட்டு போலீசார் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர்.