தமிழகத்தில் வெயில் கடந்த மார்ச் மாதம் முதல் கொளுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக கோடை வெயிலின் உச்சகட்டமான அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த 4-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. வெயில் கொடுமையை சமாளிக்க தஞ்சையில் நேற்று வாலிபர் ஒருவர் ஸ்கூட்டரின் முன்பகுதியில் தண்ணீர் நிரம்பிய வாளியை வைத்துக்கொண்டு, வாகனத்தில் சென்றவாறே தண்ணீரை எடுத்து தனது தலையில் ஊற்றியபடி சென்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.
தஞ்சை பெரியகோயில் உள்பட நகரின் முக்கிய வீதிகளில் அவர் இவ்வாறு குளித்தவாறே பயணித்தார். அந்த இளைஞரின் பெயர் அருணாசலம்(23), அவரது நண்பர் பிரசன்னா(24) இதை வீடியோவில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தார்.
இதைப்பார்த்த தஞ்சை போக்குவரத்து போலீசார் அந்த வாலிபர் அருணாசலத்தையும், நண்பர் பிரசன்னாவையும் பிடித்து அவர்கள் போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாகவும், வாகன போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாகவும் வழக்குப்பதிவு செய்து இருவருக்கும் தலா ரூ.2ஆயிரம் அபராதம் விதித்தனர்.
ஏற்கனவே இதுபோன்ற வீடீயோ, சென்னை, சிதம்பரம் உள்ளிட்ட நகரங்களில் வெளியான நிலையில் தஞ்சையிலும் அதுபோல செய்தனர். தஞ்சை போலீசார் சரியான நடவடிக்கை எடுத்ததால் இனி யாரும் இதுபோன்ற செயலில் ஈடுபடமாட்டார்கள் என நம்பலாம்.