மயிலாடுதுறை தாலுகா சின்னஇலுப்பப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜோதிலட்சுமி(40). இவரிடம் மணல்மேடு பேரூராட்சி அதிமுக கவுன்சிலரான பெரிய இலுப்பப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த செல்வி என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு மணல்மேடு பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர் பணியிடம் காலியாக இருப்பதாகவும், நிரந்தர பணி என்பதால் அதனை வாங்கிதருவதாகவும் கூறியுள்ளார். இதற்காக பணம்கொடுத்தால் அப்போதைக்கு அமைச்சராக இருந்த ஓ.எஸ்.மணியனிடம்; கூறி வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார்.
இதனை நம்பி 2021-ம் ஆண்டு பிப்.11ம் தேதி ரூ.3 லட்சம் பணம் கொடுத்துள்ளார். நேர்முக தேர்வு அழைப்பு வந்தவுடன் சென்றுபார்த்தபோது வேலை நிச்சயம் கிடைத்துவிடும் என்று கூறினார். 2021 டிசம்பர் மாதம் 10-ம் தேதி நேர்முகத் தேர்வில் கலந்துகொண்ட பிறகு மேலும் ரூ.2 லட்சம் பணம் கேட்டதால் அதனையும் கடன்வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் தூய்மைப்பணியாளர் பணிக்கு வேறு ஒருவர் நியமனம் செய்யப்பட்டார்.
அதன்பிறகு செல்வியிடம் சென்றுகேட்டபோது வேலைக்காக அமைச்சரிடம் பணம் கொடுத்துவிட்டேன். அதை உடனடியாக எல்லாம் வாங்கிக் கொடுக்க முடியாது. வேண்டுமென்றால் நேரடியாக அமைச்சரிடம் சென்று பணத்தை வாங்கிகொள் என்று கூறியுள்ளார். முன்னாள் அமைச்சரிடமும் கூறினேன், மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் எம்எல்ஏ ராதாகிருஷணனிடமும் கூறினேன், விரைவில் பெற்றுத்தருவதாகத் தெரிவித்தார்கள் ஆனால்இதுநாள்வரை வாங்கித்தரவில்லை, ஊர் பஞ்சாயத்தாரிடமும் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை,
மீண்டும் மீண்டும் பணத்தை திரும்ப தருமாறு கேட்டபோது, ஜோதிலட்சுமியையும், அவரது கணவரையும் லாரி ஏற்றி கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட ஜோதிலட்சுமி குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து பணமோசடி குறித்து புகார் அளித்தார். தொடர்ந்து, இந்த வேலைக்காக கடன்வாங்கி மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளதால், பணத்தை திரும்பப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.