Skip to content
Home » புதிய முதல்வர் சித்தராமையா… துணை முதல்வர் பதவி வேண்டாம் என டி.கே.சிவக்குமார் அதிருப்தி…

புதிய முதல்வர் சித்தராமையா… துணை முதல்வர் பதவி வேண்டாம் என டி.கே.சிவக்குமார் அதிருப்தி…

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 34 ஆண்டுகளுக்கு பிறகு அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. அதாவது 223 தொகுதிகளில் போட்டியிட்டு 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது.  ஆனால் யார் முதல்வர் என்பதில் முன்னாள் முதல்வர் சித்தாராமையா மற்றும் காங்கிரஸ் தலைவர் டி கே சிவக்குமார் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு சித்தராமையாவுக்கு இருப்பதாக கூறப்படும் நிலையில்  இருவரும் டில்லியில் முகாமிட்டுள்ளனர். 2 பேரும் மல்லிகார்ஜுன கார்கேவை அவரது இல்லத்தில் தனித்தனியாக நேரில் சந்தித்து பேசினர்.  அப்போது டி.கே.சிவக்குமார், தான் கஷ்டப்பட்டு கட்சியை பலப்படுத்தி வெற்றி பெற வைத்ததாகவும், அதனால் தனக்கு முதல்-மந்திரி பதவியை வழங்கியே தீர வேண்டும் என்றும் பிடிவாதமாக கூறியதாக தெரிகிறது.  ஒருவேளை முதல்-மந்திரி பதவி வழங்காவிட்டால் ஆட்சியில் தான் பங்கேற்க போவது இல்லை என கூறியதாக வெளியான தகவல்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று ராகுல் காந்தியை டெல்லியில் உள்ள அவருடைய இல்லத்தில் காலை 11 மணிக்கு சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் தனித்தனியாக சந்தித்து பேசினர். அப்போது, சித்தராமையாவிடம் பேசிய அவர், தங்களுக்கு முதல்-மந்திரி பதவி வழங்க இருப்பதாகவும், அனைவரையும் அரவணைத்து சிறப்பான முறையில் ஆட்சி நிர்வாகத்தை நடத்த வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். அதைத்தொடர்ந்து சந்தித்த டி.கே.சிவக்குமாரிடம் ராகுல் காந்தி, அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடிப்படையில் முதல்-மந்திரி பதவி சித்தராமையாவுக்கு வழங்க முடிவு செய்துள்ளதாகவும், தங்களுக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்குவதாகவும், வரும் காலத்தில் உங்களுக்கு உரிய பதவி வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். இதை ஏற்க மறுத்த டி.கே. சிவக்குமார், தனக்கு முதல்-மந்திரி பதவி வழங்கியே தீர வேண்டும் என்று பிடிவாதமாக கூறினார். மேலும் அவர், ஒருவேளை தனக்கு முதல்-மந்திரி பதவி வழங்காவிட்டால், சித்தராமையாவுக்கும் அந்த பதவி வழங்க கூடாது என்றும், அதற்கு பதிலாக மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்றும் கூறியதாக தகவல் வெளியானது. இதை ராகுல் காந்தி ஏற்கவில்லை என்று சொல்லப்படுகிறது. டி.கே.சிவக்குமாரின் பிடிவாதமான போக்கால் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்ய முடியாமல் காங்கிரஸ் கட்சி திணறி கொண்டிருந்தது. அதற்கு ராகுல் காந்தி கட்சியின் நலன் கருதி இந்த முடிவை தாங்கள் ஏற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து இதற்கு சம்மதம் தொிவித்துவிட்டு அதிருப்தியுடன் டி.கே.சிவக்குமார் அங்கிருந்து வெளியே வந்தார். அங்கிருந்து நேராக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து பேசினார். அங்கு தனக்கு முதல்-மந்திரி பதவி வழங்காதது குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் இழுபறி நிலை முடிவுக்கு வராததால் கர்நாடக அரசியலில் பரபரப்பு நீடித்து வந்த நிலையில், கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையாவும்..துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மே 20-தேதி பெங்களூருவில் பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *