தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, சென்னை அண்ணா சாலையில் உள்ள , தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் மின்வாரிய துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் இன்று ஆய்வுக்கூட்டம் நடந்தது. கோடை காலத்தில் மின் தேவையை கையாள்வது குறித்து நடந்த இந்த கூட்டத்தில் அனைத்து இயக்குனர்கள் மற்றும் தலைமை பொறியாளர்கள் பங்கேற்றனர். அதேபோல் இதே பகுதியில் 24 மணி நேரமும் செயல்படும் மின்னகமான மின் நுகர்வோர் சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்தும் அமைச்சர் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். இங்கு இதுவரை வந்த 16,24,663 புகார்களில் 99.33% புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, சென்னை ஆர்.கே.நகர் கேவிபி தோட்டம் பகுதியில் மண்ணில் மின் கேபிள் புதைக்கப்பட்டுள்ளது. இதில் பழுது நீக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இப்பணியையும் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மயிலாப்பூர் எம்எல்ஏ தா.வேலு, மின்வாரிய இயக்குனர் சிவலிங்கராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.