திருச்சி மாவட்டத்தை தலைமை இடமாகக் கொண்டு தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. ஒன்பது பேரால் தொடங்கப்பட்ட இந்த நிதி நிறுவனம் திருச்சி, தஞ்சை உள்பட 10 இடங்களில் செயல்பட்டது.
அதிக வட்டி தருவதாக இந்நிறுவனத்தினர் ஆசை வார்த்தை கூறியதை நம்பி, நூற்றுக்கணக்கானோர் பல கோடி ரூபாய் முதலீடு செய்தனர்.
இந்நிலையில், பணத்தை திரும்பக் கேட்ட வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் முறையாக பதில் அளிக்கவில்லை. இதனால், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த 50க்கும் அதிகமான முதலீட்டாளர்கள் காவல் துறையில் புகார் செய்தனர்.
இதன் பேரில் தஞ்சாவூர் பொருளாதார குற்றப் பிரிவினர் வழக்குப் பதிந்து இந்நிறுவனத்தைச் சேர்ந்த இருவரை கடந்த 5 ம் தேதி கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, தஞ்சாவூர் முனிசிபல் காலனி எட்டாம் தெருவைச் சேர்ந்த எஸ். பார்த்திபன் (43), இவரது மனைவி சுகந்தா தேவியை (35) பொருளாதார குற்றப் பிரிவினர் கைது செய்தனர்.