திருச்சி அடுத்த கல்பாளையத்தை சேர்ந்தவர் கலைவாணி, கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிகிறார். இவர் சில நாட்களுக்கு முன் காந்தி மார்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் புளி வாங்கிசென்றாராம். இந்த புளி தரமானதாக இல்லை என்பதால் அதை மீண்டும் அதே கடைக்கு கொண்டு வந்து கொடுத்து உள்ளார். அப்போது கடைக்காரருக்கும், கலைவாணிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், கலைவாணியின் கிராமத்தை சேர்ந்த சிலர் கடைக்கு வந்து தகராறு செய்து உள்ளனர். இது தொடர்பாக கடை உரிமையாளர் சாதிக்பாட்சா, காந்தி மார்க்கெட் போலீசில் புகார் செய்தார். அதில் கிராம நிர்வாக அதிகாரி 30க்கும் மேற்பட்டவர்களை அழைத்து வந்து கடையை சேதப்படுத்தி, கடையில் உள்ளவர்களை தாக்கி, ரூ.1.5 லட்சத்தையும் எடுத்து சென்று விட்டார் என கூறி உள்ளார்.
புகாரில் கூறியபடி அங்கு சம்பவம் நடந்ததா என்பது குறித்து போலீசார் விசாரிக்கிறார்கள். போலீசார் நடவடிக்கை எடுக்காவிட்டால் காந்தி மார்க்கெட் வியாபாரிகளை திரட்டி போராட்டம் நடத்துவோம் என வியாபாரி சாதிக்பாட்சா தெரிவித்தார்.