திருச்சி மாவட்டம், லால்குடி ரவுண்டானா பகுதியை சுற்றிலும் அரியலூர் சாலை, அன்பில் சாலை, லால்குடி பிரதான சாலைகளை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டன. இதில் திருச்சி சாலையில் செல்லும் வாகனங்களின் பதிவு எண்ணை துல்லியமாக படம் பிடித்து, கண்காணிப்பு மையத்திற்கு அனுப்பி வைக்கும் திறன் கொண்ட கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், லால்குடி பஸ் ஸ்டாண்ட் அருகில் கண்காணிப்பு கேமராக்களுக்கான கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டது. இந்த கண்காணிப்பு மையம் மற்றும் கண்காணிப்பு கேமராக்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
லால்குடி டி. எஸ். பி அஜய் தங்கம் தலைமை தாங்கி, கண்காணிப்பு மையத்தை திறந்து வைத்தார். இன்ஸ்பெக்டர்கள் பிரபு (போக்குவரத்து ) நவநீதகிருஷ்ணன், எஸ்ஐ பிரகாஷ், போக்குவரத்து, பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். லால்குடி போலீஸ் நிலைய எல்லைப்பகுதியில் குற்றங்களை தடுக்க சுமார் 40 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல், லால்குடி போலீஸ் நிலைய எல்லையில் விரைவில் கண்காணிப்பு கேமராக்கள், சுங்கச்சாவடி அமைக்கப்படவுள்ளது என டி. எஸ். பி அஜய் தங்கம் தெரிவித்தார்.