Skip to content
Home » அமிர்தகுஜாம்பாள் சமேத லோகநாதசுவாமி கோயில் மஹா கும்பாபிஷேகம்..

அமிர்தகுஜாம்பாள் சமேத லோகநாதசுவாமி கோயில் மஹா கும்பாபிஷேகம்..

தஞ்சையின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது சாமந்தான்குளம். கி.பி., 14ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர் ஒருவரது தளபதியான சாமந்தநாராயணன் என்பவர் தஞ்சையில் கீழை நரசிம்ம பெருமாள் கோவில் கட்டினார். அக்கோவிலுக்கு குளம் ஒன்று தேவை எனக்கருதி இக்குளத்தை வெட்டினார்.

அப்பகுதியை சாமந்த நாராயண சதுர்வேதிமங்களம் என பெயரிட்டு ஒரு குடியிருப்பு பகுதியை உருவாக்கினார். காலப்போக்கில் அக்குளம் சாமந்தான்குளம் என்றானது. இக்குளம் நகரின்

மையத்தில் உள்ளதால் இந்நகரின் நிலத்தடி நீராதாரத்துக்கு முக்கிய காரணமாக விளங்கி வந்தது. இந்த குளத்தின் மேல்கரையில் மிகவும் பழமைவாய்ந்த அமிர்தகுஜாம்பாள் சமேத லோகநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலில் அமிர்தகுஜாம்பாள் சமேத லோகநாத சுவாமி, விநாயகர், சுப்ரமணியர், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்கள் அமைந்துள்ளன. இக்ோயில் திருப்பணிகள் நிறைவடைந்தது. இதையடுத்து கடந்த 12ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

அதன்படி அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, மஹா கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், லெக்ஷ்மி ஹோமம், பூர்ணாஹுதி ஆகியவை நடந்தது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடந்து நேற்று சிறப்பு வழிபாடுகள் நிறைவடைந்து கடம் புறப்பட்டு மூலஸ்தான விமான கும்பாபிஷேகம், மூலஸ்தான விக்ரஹங்களுக்கு கும்பாபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடந்தது. இதில் தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகப்பொறுப்பாளர்கள் தலைவர் ரமேஷ், செயலாளர் பகவக்த் ராவ், பொருளாளர் ராஜகுமார் மற்றும் தஞ்சை மாநகராட்சி 25 வார்டு உறுப்பினர் தெட்சிணா மூர்த்தி மற்றும் பலர் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *