திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலியில் உள்ள நீலிவனேஸ்வரர் கோவிலில் திருக்கட்டமுது பெருவிழா நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி, திருகற்குடி, திருப்பராய்த்துறை ஆகிய சிவதலங்களை தரிசித்து விட்டு அப்பர்) காவிரியை கடந்து திருப்பைஞ்சீலியை நோக்கி நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அப்பர் பசியாலும், தாகத்தாலும் வருந்தினார். இதை அறிந்த சிவபெருமான் கோவிலுக்கு வரும் வழியில் ஒரு சோலையையும், குளத்தையும் உண்டாக்கினார். அப்போது, சோலையில் ஓய்வெடுத்த அப்பர் முன் அந்தணர் வேடத்தில் தோன்றிய சிவபெருமான் என்னிடம் கட்டுசோறு உள்ளது. அதை சாப்பிட்டு பசியாறி பிறகு செல்லலாம் என்று
கூறினார். அதன்படி இருவரும் சாப்பிட்ட பின்னர் பொய்கையில் நீர் அருந்தி நடந்து சென்றனர். திருப்பைஞ்சீலியில் உள்ள சிவன் கோவிலுக்குள் சென்றதும் அந்தணராக வந்த சிவபெருமான் மாயமாகிவிட்டார். அப்போதுதான் இறைவனே அந்தணராக வேடமணிந்து வந்து தனக்கு உணவு அளித்ததை அப்பர் உணர்ந்துள்ளார். என் பசியும், தாகமும் தீர்க்க வந்தனையே என்று அப்பர் பெருமான் மெய்யுருக பதிகம் பாடினார்.
இந்த நாளை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் திருக்கட்டமுதுபெருவிழா திருப்பைஞ்சீலியில் நடைபெறுவது வழக்கம் அதன்படி, இந்த ஆண்டு திருக்கட்டமுது பெருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை சாமி சோலையை நோக்கி புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து, திருநாவுக்கரசருக்கு திருக்கட்டமுது அளித்தல் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து மதியம் சிவனடியார்களுக்கு அன்னம் பாலிப்பும் நடைபெற்றது.பின்னர் மாலை சோருடைய நாயகரும், அப்பர் சுவாமிகளும் திருப்பைஞ்சீலியில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்றனர்.இரவு சாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து விசாலாட்சி சமேத நீலிவனேஸ்வரர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அப்பர் சாமிகளுக்கு காட்சியளித்தார்.
தொடர்ந்து சாமி ரிஷப வாகனத்தில் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் லெட்சுமணன் மேற்பார்வையில், கோவில் செயல் அலுவலர் மனோகரன் மற்றும் ஆறுநாட்டு வேளாளர் சங்க தலைவர் நிர்வாகிகள் உள்ளிட்டோர் செய்து இருந்தனர்.