யூனியன் பிரதேசமான டில்லியை ஆளும் ஆம்ஆத்மி அரசு தொடர்ந்த வழக்கில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் நிர்வாகத்தில் அதிகாரம் உள்ளது என சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு யூனியன் பிரதேசமான புதுவைக்கும் பொருந்தும் என புதுவை அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வரவேற்றுள்ளனர். ஆனால் கவர்னர் தமிழிசை டில்லி யூனியன் பிரதேசத்துக்கு வழங்கப்பட்ட சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அனைத்து யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தாது என கருத்து தெரிவித்துள்ளார்.
புதுவை கம்பன் விழாவை தொடங்கி வைத்த கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் இந்த கருத்தை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:ர் சுப்ரீம்கோர்ட்டு டில்லி அரசுக்கான வழிமுறையை சொல்லி இருக்கிறார்கள். தலைநகர் என்பதால் அதற்கென்று தனி கருத்து உள்ளது. ஒவ்வொரு யூனியன் பிரதேசமும் வெவ்வேறு தான். ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விதம். எல்லாமே மக்களுக்கானதுதான். நீதிமன்ற தீர்ப்பில் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார். டில்லி யூனியன் பிரதேசத்துக்கான தீர்ப்பு புதுவைக்கும் பொருந்தும் தானே? என கேட்டதற்கு, ‘இந்த தீர்ப்பு அனைத்து யூனியன் பிரதேசத்துக்கும் பொருந்தாது. கவர்னர்கள்தான் அதிகாரம் படைத்தவர்கள் என்று நாங்கள் சொல்வதில்லை. முக்கியமாக நான் சொல்வதில்லை. அன்பால்தான் ஆள்கிறோம்” என தெரிவித்தார்