பாடாலூர், பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா கொளத்தூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விழா குழுவினரும், பொதுமக்களும் ஏற்பாடு செய்தனர். அதற்கான அனுமதி மாவட்ட நிர்வாகத்திடம் கோரப்பட்டது. இதனை யடுத்து ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் வாடி வாசல் அமைக்கும் பகுதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வாறு செய்யப்பட்டுள்ளது என்று பெரம்பலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பெரம்பலூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் ஆலத்தூர் வட்டாட்சியர் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதையொட்டி கொளத்தூர் காட்டு பகுதியில் வாடிவாசல்
அமைக்கப்பட்டது. காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. பின்னர் காலை 8.30 மணியளவில் ஜல்லிக்கட்டு போட்டி தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
இதில் 250-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், பெரம்பலூர், பாடாலூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த 200-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
காளைகள் முட்டியதில் 8 க்கும் மேற்பட்டோர் லேசான காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் கட்டில், சில்வர் பாத்திரம், சேலை போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருச்சி, பாடாலூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியை கண்டு களித்தனர். ஜல்லிக் கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் மற்றும் கொளத்தூர் பொதுமக்கள் செய்திருந்தனர்.