அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உதயநத்தம் ஊராட்சிக்குட்பட்ட கோடாலி கிராமத்தில் சுமார் 500 – க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இதில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பகுதியில் இருந்த பழைய கட்டிடம் பழுதானது.
இதையடுத்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் பழைய கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது. மீண்டும் தற்பொழுது அதே இடத்தில் புதிய ரேஷன் கடை கட்ட ஏற்பாடு நடந்து வந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் அரசுக்கு சொந்தமான பொது இடத்தில் மாரியம்மன் கோயில் அருகே ரேஷன் கடையை கட்ட வலியுறுத்தி கிராம மக்கள் குடும்ப
அட்டைகளை விஏஓ அலுவலகத்தில் ஒப்படைக்க வந்தனர். இதுகுறித்து சம்பவம் அறிந்த தா.பழூர் போலீசார் மற்றும் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதில் தற்பொழுது தற்காலிகமாக 3 நாட்களில் ஒரு இடத்தினை தேர்வு செய்து அந்த இடத்தில் பொது மக்களுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் பொதுவான இடத்தில் பகுதி நேர ரேஷன் கடை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததன் பெயரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் கோடாலி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.