Skip to content
Home » மாநில அரசுக்கு தான் அதிகாரம் ……கவர்னருக்கு கிடையாது…..உச்சநீதிமன்றம் சம்மட்டி அடி

மாநில அரசுக்கு தான் அதிகாரம் ……கவர்னருக்கு கிடையாது…..உச்சநீதிமன்றம் சம்மட்டி அடி

தலைநகர் டில்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இங்கு மத்திய குடிமைப்பணிகள் அதிகாரிகள் நியமனம் என்பது நேரடியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.  இதனால் பணி நியமனம், பணி இடமாற்றத்தை மத்திய அரசு தான் மேற்கொண்டு வருகிறது. இதனை டில்லி அரசு விரும்பவில்லை. இந்நிலையில் மத்திய அரசிடம் இருக்கும் அதிகாரத்தை எதிர்த்து ஆம்ஆத்மி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டது. அங்கு வழக்கு நடந்து வருகிறது. முன்னதாக விசாரணையின்போது மத்திய அரசு மற்றும் டில்லி அரசு சார்பில் தனித்தனியே வாதங்கள் முன்வைக்கப்பட்டன. மத்திய அரசு சார்பில், ‛‛டில்லி இந்தியாவின் தலைநகராக உள்ளது. உலக நாடுகள் டில்லியின் வழியாக தான் இந்தியாவை பார்க்கின்றனர். இதனால் அரசு ஊழியர்களின் நியமனம் மற்றும் இடமாற்றம் தொடர்பாக மத்திய அரசுக்கு அதிகாரம் என்பது தேவையான மற்றும் அவசியமான ஒன்று. மத்திய அரசுக்கு டில்லியின் நிர்வாகத்தின் மீது சிறப்பு அதிகாரங்கள் இருப்பதும், முக்கியமான பிரச்சினைகளில் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதும் அவசியம்.

மத்திய அரசுக்கும்,டில்லிக்கும் இடையே நேரடி மோதலை தடுக்கவும் சட்டங்கள் உள்ளன. இதனால் டில்லியின் மீது மத்திய அரசு கட்டுப்பாட்டை வைத்திருப்பது தேச நலனுக்கு முக்கியமானது” என வாதிடப்பட்டது.

இதற்கு டில்லி அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதுதொடர்பாக டில்லி தரப்பில், ‛‛மத்திய அரசுக்கு சிறப்பு அதிகாரம் வழங்குவது என்பது டில்லி சட்டசபையை அர்த்தமற்றதாக ஆக்கிவிட்டது. இதனால் டில்லி அரசால் தனித்து மற்றும் சுதந்திரமாக செயல்பட முடியாத சூழல் உள்ளது. டில்லி அரசின் முடிவுகள் நிலுவையில் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் டில்லி அரசின் கொள்கை சார் முடிவுகளை, மத்திய அரசு லெப்டினண்ட் ஆளுநர் மூலம் தடுத்து செயல்பட விடாமல் செய்கிறது. இதற்கு தீர்வு காண தான் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது” என வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட அரசியல் சாசன அமர்வின் நீதிபதிகள் வழக்கு தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்நிலையில் தான் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

மாநிலங்களின் நிர்வாக அதிகாரத்தை மத்திய அரசு எடுத்துக்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி கொள்கை என்பது நமது அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பின் ஒரு அங்கம் ஆகும். ஜனநாயக நாட்டில் மக்கள் தேர்ந்தெடுத்த அரசின் கைகளிலேயே நிர்வாக அதிகாரம் இருக்க வேண்டும்.அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் கையில் கொடுக்கவில்லை என்றால் அது பெரும் சிக்கலை உருவாக்கும். ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தின் அதிகார வரம்பிற்குள் அதிகாரிகள் இல்லை என்றால் அது அந்த அரசின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்கும்.

ஒரு அமைச்சரின் கீழ் செயல்படும் அதிகாரி அமைச்சரின் உத்தரவுகளுக்கு கட்டுப்படவில்லை என்றால் ஒருங்கிணைந்த உறுதிப்பாடு என்ற கொள்கைக்கு ஆபத்து ஏற்பட்டு விடும். டில்லி அரசு அதிகாரிகள் மீது அதிகாரம் செலுத்த டில்லி அரசாங்கத்திற்கு அதிகாரம் உண்டு என நீதிபதிகள் தீர்ப்பினை வாசித்தனர். “மக்களாட்சியில் உண்மையான நிர்வாக அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடம் இருக்க வேண்டும் என குறிப்பிட்டனர். அதன்படி,டில்லியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றத்தில் மாநில அரசுக்கே அதிகாரம் என்பது இந்த தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. டில்லி துணை நிலை ஆளுநருக்கே அதிகாரம் என்ற மத்திய அரசின் வாதம் நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!