மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 2.2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்தனர். திமுக ஆட்சியில் ஒன்றரை வருடத்தில் ஒன்றரை லட்சம் பேருக்கு இலவச மின்சாரம் கொடுத்துள்ளோம். ஏற்கனவே 1 லட்சம் பேருக்கு இணைப்பு கொடுத்து விட்டோம். கடந்த மாதம் 50ஆயிரம் இணைப்பு வழங்கும் பணி தொடங்கப்பட்டது. அதில் 34,134 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய 18,866 விவசாயிகளுக்கு விரைவில் மின் இணைப்பு வழங்கப்படும். பொங்கலுக்கு முன்பாக 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும். 2.67 கோடி மின் நுகர்வோர்களுக்கு மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை ஒரு கோடியே 20 லட்சம் பேர் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து இருக்கிறார்கள். தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது. ஆன்லைன் மூலமாக மொத்தம் 58 லட்சமும் சிறப்பு முகம் மற்றும் அலுவலகங்கள் என மொத்தம் 67 லட்சம் பேர் இணைத்துள்ளனர். தொடர்ந்து பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இந்த மாத இறுதிக்குள் மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளை விரைவாக முடித்துக்கொள்ளுமாறு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.