1883 ஆம் ஆண்டு திருவாரூரில் உள்ள பாலூர் என்ற கிராமத்தில் தந்தை கிருஷ்ணசாமிக்கும் தாய் சின்னம்மாளுக்கு மகளாக பிறந்தவர் ராமாமிர்தம் அம்மையார். மயிலாடுதுறை அருகில் உள்ள மூவலூர் என்ற கிராமத்தில் குடியேறினர். தமிழகத்தின் அன்னிபெசண்ட் என அறிஞர் அண்ணாவால் போற்றப்பட்டவர் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார். பெண் விடுதலை, சுயமரியாதை, மொழிப்போர் உள்ளிட்டவற்றுக்காக தனது வாழ்நாளையே அர்ப்பணித்தவர். தேவதாசி ஒழிப்பு இயக்க செயற்பாட்டாளராக திகழ்ந்தவர். இவரது பெயரிலேயே தமிழக அரசின் திருமண உதவி திட்டம் செயல்பட்டு வருகிறது. மூவலூர் இராமாமிர்தம் அம்மையாருக்கு மயிலாடுதுறையில் திருஉருவச் சிலை அமைக்கப்படும் என 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அவ்வகையில் மயிலாடுதுறையில் வரதச்சாரியார் பூங்காவில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையருக்கு ரூ.15.98 லட்சம் மதிப்பீட்டில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக 6அடியில் திரு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலையை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் காணொளி வாயிலாக இன்று திறந்து வைத்தார். மயிலாடுதுறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி எம்.பி ராமலிங்கம் சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா முருகன் பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். சிலையின் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் சிலை முன்பு புகைப்படம் எடுத்து கொண்டனர்.