தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி அடுத்தடுத்து வலுவடைந்து நேற்று காற்றழுத்தத் தாழ்வுமண்டலமாக மாறியது. இது மேலும் வலுவடைந்து, இன்று புயலாக மாறவுள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று முதல் மே 13-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருநெல்வேலி, மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.