மயிலாடுதுறையில் திமுக நகரக் கழகம் சார்பில் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை துறை அமைச்சர் சிவ.வீ மெய்யநாதன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில் குறிப்பாக இயற்கை வளங்கள் நிறைந்த டெல்டா மாவட்டத்தை கண்ணை இமைகள் பாதுகாப்பது போல் முதலமைச்சர் ஸ்டாலின் பாதுகாத்து வருகிறார். மத்திய அரசு 3 நிலக்கரி சுரங்கங்களுக்கு ஏலமிட அறிவிப்பை வெளியிட்டவுடன் உடனடியாக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து கண்டிப்பாக இந்த திட்டத்தை டெல்டா மாவட்டத்தில் செயல்படுத்த அனுமதிக்க மாட்டேன் என்று ஆண்மையோடு சொன்னவர் முதலமைச்சர் ஸ்டாலின். ஆனால் அதிமுக ஆட்சியில் என்னுடைய தொகுதியான புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அறிவித்தபோது அதிமுகவினர் வாய் திறக்கவில்லை. 176 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திமுக தலைவர் ஸ்டாலின் போராட்ட களத்திற்கு வந்து எந்த காரணத்தைக் கொண்டும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் அபாயகரமான திட்டத்தை அனுமதிக்க மாட்டேன் என்று விவசாயிகளிடம் சொல்லிவிட்டு வந்தார். இன்று ஆட்சிக்கு வந்தவுடன் அந்தத் திட்டம் வராமல் தடுத்துள்ளார். திமுகவின் இரண்டு ஆண்டு ஆட்சி காலத்தில் எந்த ஒரு அபாயகரமான திட்டத்தையும் அனுமதிக்க வில்லை என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.