நம்மை காக்கும் 48 திட்டம் தந்த, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லாசியுடன் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம் இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கலெக்டர் பிரபு சங்கர் , எஸ்.பி. சுந்தரவதனம், எம்.எல்.ஏக்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வணிகர்கள், கல்வியாளர்கள் இதில் பங்கேற்றனர்.
முன்னதாக நெடுஞ்சாலை துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. அதில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, ஏ.வ. வேலு கலந்து கொண்டு மரக் கன்றுகளை நட்டு , அவற்றுக்கு தண்ணீர் ஊற்றினர்.
கூட்டம் முடிந்ததும் அமைச்சர் ஏ.வ. வேலு அளித்த பேட்டி:
கரூர் மாவட்டத்தில் 143 கிலோ மீட்டர் சாலைகள் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
அமராவதி ஆற்றின் குறுக்கே கோயம்பள்ளி பகுதியில் ரூ.13.70 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மேம்பாலம் அணுகு சாலை அமைக்கப்படாமல் பல ஆண்டு காலமாக கிடப்பில் உள்ளது. மீண்டும் அதற்கான பணிகள் தொடங்க 6 கிராமங்களில் நில அளவீடு செய்து, அணுகு சாலை அமைக்க டிபிஆர் தயார் செய்யும் பணி நடைபெற்றுள்ளது.
கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் 10 லட்சம் மதிப்பில் நகரும் படிக்கட்டுகள் விரைவில் அமைக்கப்பட உள்ளது. மேலும், சுற்றுவட்ட சாலை பணிகள் தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்து, மதுரை உயர்நீதிமன்றம் திட்டத்தை செயல்படுத்த ஆணை பிறப்பித்துள்ளது. அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
10 ஆண்டுகளுக்கு முன்பு பயன்பாட்டுக்கு வரவேண்டிய கரூர் – கோவை நான்கு வழிச்சாலை பணிகள் துவங்குவதற்கு 137 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது. நான்கு வழிச்சாலை பணிகள் இன்னும் ஓராண்டுக்குள் முடிவுக்கு வரும்
இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.